கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் அதிமுக கவுன்சிலர்கள் திடீர் தா்ணா
கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் அதிமுக கவுன்சிலர்கள் திடீர் தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி நகராட்சியில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தில் 16 பணிகளுக்கு இன்று(வெள்ளிக்கிழமை) டெண்டர் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அதற்கான விண்ணப்பங்களை நேற்று நகராட்சி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பாபு, முருகன், சத்யா, விமலா, சங்கீதா, ஒப்பந்ததாரர் அருண்கென்னடி உள்பட பலர் டெண்டர் விடப்படுவது சம்பந்தமாக கவுன்சிலர் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு முன்கூட்டியே அதன் நகலை கொடுக்க வேண்டும், மேலும் முறையாக அறிவிப்பு இல்லாமல் டெண்டர் வைக்கக்கூடாது. எனவே டெண்டர் விடும் பணியை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி நகராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நிர்வாக காரணங்களால் டெண்டர் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு பலகையில் நகராட்சி ஆணையர் குமரன் நோட்டீஸ் ஒட்டினார். இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.