திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

Update: 2022-03-17 17:17 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே பள்ளப்பட்டி ஊராட்சியில் எம்.ஜி.ஆர். நகர், ஏ.பி.நகர், பாத்திமா நகர், நல்லகேணி தெரு ஆகிய பகுதிகள் உள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வரவில்லை என்றும், பழுதடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நேற்று பள்ளப்பட்டி ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று ஊராட்சி தலைவர் பரமனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடைபாறைப்பட்டி பஸ்நிறுத்தம் அருகே திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திண்டுக்கல் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளுடன் பேசி உடனடியாக குடிநீர் வினியோகம் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும், பழுதடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்