தேயிலைத்தூளுக்கு தொடர் விலை வீழ்ச்சி

கோவை ஏல மையத்தில் தேயிலைத்தூளுக்கு தொடர் விலை வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது.

Update: 2022-03-17 16:40 GMT
கோவை

கோவை ஏல மையத்தில் தேயிலைத்தூளுக்கு தொடர் விலை வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது.

தேயிலைத்தூள் ஏலம்

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தேயிலை வர்த்தக மையத்தில் வாரந்தோறும் புதன்கிழமை மின்னணு முறையில் தேயிலைத்தூள் ஏலம் விடப்படுகிறது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்து கொண்டு ஏலம் எடுக்கின்றனர். 

இந்த வாரம் நடந்த ஏலத்தில்(இந்த ஆண்டுக்கான 11-வது ஏலம்) 40 பேர் கலந்து கொண்டனர். ஏலத்துக்கு 2 லட்சத்து 47 ஆயிரத்து 605 கிலோ தேயிலைத்தூள் வந்தது. அதில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 324 கிலோ ஏலம் போனது. இதன் ரொக்க மதிப்பு  ரூ.1 கோடியே 69 லட்சத்து 15 ஆயிரத்து 466 ஆகும்.

இலைரக தேயிலை

ஒரு கிலோ தேயிலைத்தூள் விலை 103 ரூபாய் 57 காசாக இருந்தது. ஆனால் கடந்த ஏலத்தில் ஒரு கிலோ தேயிலைத்தூள் 109 ரூபாய் 6 காசுக்கு விற்பனையானது. இதன் மூலம் கிலோவுக்கு 5 ரூபாய் 49 காசு விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. 

இலை ரக தேயிலை 2 லட்சத்து 47 ஆயிரத்து 848 கிலோ ஏலத்துக்கு வந்தது. அதில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 742 கிலோ ஏலம் போனது. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 16 லட்சத்து 20 ஆயிரத்து 611. ஒரு கிலோ இலை ரக தேயிலை விலை 93 ரூபாய் 91 காசாக இருந்தது. இது கடந்த வாரம் 94 ரூபாய் 23 காசாக இருந்தது. இதனால் கிலோவுக்கு 32 காசு விலை குறைந்து உள்ளது. 

விலை குறைவுக்கு காரணம்?

கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் கிலோ ரூ.122-க்கு விற்ற தேயிலைத்தூள் தற்போது கிலோ ரூ.103-க்கும், ரூ.108-க்கு விற்ற இலைரக தேயிலை தற்போது ரூ.93-க்கும் என படிப்படியாக விலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. 

இதுகுறித்து ஏல மைய அதிகாரி கூறுகையில், கடந்த டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை வடமாநிலங்களில் தேயிலை உற்பத்தி இல்லாததால், தேவை அதிகரித்து தென்மாநிலங்களில் விலை அதிகரித்தது. தற்போது அங்கு உற்பத்தி தொடங்கி விட்டதால், தென் மாநிலங்களில் விலை சீராக குறைந்து வருகிறது. மேலும் உக்ரைன்-ரஷியா போர் காரணமாக தேயிலை ஏற்றுமதி செய்ய முடியாததால், இங்கு தேக்கமடைந்து இருப்பதும் விலை குறைவுக்கு மற்றொரு காரணம் என்றார்.

மேலும் செய்திகள்