நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விரைவில் கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும்-முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை

நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விரைவில் கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்

Update: 2022-03-17 16:36 GMT
பெங்களூரு: நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விரைவில் கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
நடிகர் புனித் ராஜ்குமார் பிறந்த நாளையொட்டி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அபாரமான சாதனை

நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வலியுறுத்தினர். அதன்படி அவருக்கு அந்த விருது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கர்நாடக ரத்னா விருது விரைவில் புனித் ராஜ்குமார் குடும்பத்திற்கு வழங்கப்படும். இந்த விருது வழங்கும் நாள் குறித்து குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்.

நடிகர்கள் ராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமாருக்கு கவுரவம் ஏற்படுத்தும் வகையில் விழா நடத்தப்படும். இந்த விழாவுக்காக ஒரு குழு அமைக்கப்படும். புனித் ராஜ்குமார் சிறு வயதிலேயே அபாரமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதிக மக்களின் மனங்களை கவர்ந்துள்ளார். இப்போதும் அவர் நம்முடனேயே இருக்கிறார் என்றே நினைக்க தோன்றுகிறது.

ஜேம்ஸ் படம்

உடல் ரீதியாக அவர் நம்மை விட்டு விலகி சென்று இருக்கலாம். ஆனால் அவர் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவர் வாழ்ந்திருந்தால் இன்னும் பல சாதனைகளை புரிந்திருப்பார். ஆனால் அவரது விதி வேறு விதமாக அமைந்துவிட்டது. அவர் நடிப்பில் வெளியாகியுள்ள ஜேம்ஸ் படத்தை பார்ப்பேன். பொதுமக்களும் அவரது படத்தை பார்க்க வேண்டும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்