முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்ட எதிர்ப்பு கேரளாவுக்கு செல்லும் சாலைகளை மறித்து போராட்டம் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேட்டி
முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேரளாவுக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் மறித்து போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
கொடைக்கானல்:
தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில பொதுக்குழு கூட்டம் கடந்த 2 நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்ட முடிவில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சிக்கிறது. இதை கண்டித்தும், இதற்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசை கண்டித்தும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 30-ந்தேதி தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் அனைத்து சாலைகளையும் முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தப்படும்.
காவிரி மேலாண்மை ஆணையம்
பாரதீய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தமிழகத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. காவிரியில் மேகதாது அணை கட்ட மத்திய அரசு, கர்நாடக அரசுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்கிறது. கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலின்போது பேசுகையில், காவிரி மேலாண்மை ஆணையம் ஒரு அதிகாரமற்ற ஆணையம் என கூறியுள்ளார். மேகதாதுவில் அணை கட்ட ஆயிரம் கோடி ரூபாயை கர்நாடக முதல்-மந்திரி ஒதுக்கீடு செய்திருக்கிறார். எனவே காவிரி மேலாண்மை ஆணையம் அதிகாரம் மிக்க ஆணையமா?, இல்லையா? என்பது குறித்து முதல்-அமைச்சர் விளக்க வேண்டும்.
உரத்தட்டுப்பாடு
கர்நாடக அரசு ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ததை கண்டித்து சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் வழக்கு தொடர உள்ளோம். மேலும் இதை தடுத்து நிறுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உரத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. வேளாண் தொழிலை லாபகரமான தொழிலாக மாற்றும் வகையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்புகள் இடம்பெற வேண்டும். கொடைக்கானல் நகரில், இயற்கை வளங்களை அழித்து விட்டு பல சொகுசு விடுதிகள் கட்டப்பட்டு வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கொடைக்கானல் கிளை நிர்வாகிகள் செல்வராஜ், பாக்கியமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.