கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கூடலூர் -கேரளா சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இதனால் பயணிகள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
கூடலூர்
கூடலூர் -கேரளா சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இதனால் பயணிகள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
மரம் விழுந்தது
கூடலூரில் இருந்து கேரள மாநிலம் மலப்புரம் செல்லும் மலைப்பாதையில் வாகன விபத்துகளால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கீழ் நாடுகாணி அண்ணா நகர் அருகே சாலையின் இடது புறம் நின்றிருந்த ராட்சத மரம் சரிந்து சாலையில் விழுந்தது.
இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தேவாலா போலீசார் மற்றும் கூடலூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சாலை யோரம் மேடான பகுதியில் இருந்து மரம் சரிந்து விழுந்ததால் மரத்தை உடனடியாக அகற்ற முடியவில்லை.
போக்குவரத்து பாதிப்பு
இதன் காரணமாக பொக்லைன் எந்திரத்தை வரவழைக்க முடிவு செய்யப் பட்டது. ஆனால் பொக்லைன் எந்திரம் வர தாமதமானது. இதைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் சாலையின் நடுவே கிடந்த மரத்தின் ஒரு பகுதியை வெட்டி அகற்றினார்கள்.
பின்னர் அந்த வழியாக மோட்டார் சைக்கிள், சிறிய ரக கார் மட்டும் செல்ல அனுமதி அளித்தனர். ஆனால் கனரக வாகனங்கள், பஸ்கள் இயக்க முடியவில்லை. இதனால் வாகனங்கள் நீண்டவரிசையில் காத்து நின்றன.
தொடர்ந்து தீயணைப்பு துறையினர் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் மாலை 3.45 மணிக்கு மரத்தை வெட்டி அகற்றினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தால் வெளிமாநில பயணிகள் மற்றும் வாகன டிரைவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
உடனடி நடவடிக்கை
இது குறித்து பயணிகள் கூறும்போது, கூடலூர்- மலப்புரம் சாலை மிகவும் மோசமாக உள்ளதால் வாகன விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. இதனால் குறிப்பிட்ட இடத்துக்கு உரிய நேரத்தில் செல்ல முடிவதில்லை.
இதனால் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்றனர்.