3 மணி நேரத்தில் 30 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை நாகை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை

3 மணி நேரத்தில் 30 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்து நாகை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2022-03-17 18:45 GMT
நாகப்பட்டினம்:-

3 மணி நேரத்தில் 30 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்து நாகை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கண்புரை அறுவை சிகிச்சை

நாகையில் உள்ள அரசு ஆஸ்பத்திரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவக்கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து நவீன உபகரணங்கள் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நிறுவப்பட்டு வருகின்றன. 
இங்கு உள்ள கண் சிகிச்சை மையத்தில் ‘லேசர்’ மூலம் கண்புரை அறுவை சிகிச்சை செய்யும் கருவி, கண் விழித்திரை அறுவை சிகிச்சை செய்யும் கருவி, கணினி மூலம் கண் பரிசோதனை செய்யும் கருவி என அதிநவீன கருவிகள் உள்ளன. இதை கொண்டு கண் நோயாளிகளுக்கு டாக்டர்கள் ஹரிஹரசங்கர், சத்யநாராயணன் ஆகியோரை கொண்ட குழுவினர் தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். 

3 மணி நேரத்தில்...

இந்த நிலையில் நேற்று முன்தினம் 3 மணி நேரத்தில் 30 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்து இந்த டாக்டர் குழுவினர் சாதனை படைத்துள்ளனர். 
இதுகுறித்து டாக்டர் ஹரிஹரசங்கர் கூறியதாவது:-
நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் கண் சிகிச்சை பிரிவிற்கு அதிநவீன உபகரணங்கள் வந்துள்ளன. இதை வைத்து கண் புரை சிகிச்சை, விழித்திரை சிகிச்சை, கண் அழுத்த நோய்க்கான சிகிச்சை உள்ளிட்ட கண் சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை செய்து வருகிறோம். 

பார்வை திறன்

கணினி மூலமாக கண்களை பரிசோதனை செய்வதால் நோயின் தன்மையை எளிதில் கண்டறிந்து தேவையான சிகிச்சைகளை உடனடியாக அளிக்க முடிகிறது. இதனால் தான் 3 மணி நேரத்தில் 30 நோயாளிகளுக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்ய முடிந்தது. இப்போது நோயாளிகள் முன்பு இருந்தது போல் நல்ல பார்வை திறனை பெற்று உள்ளனர்.

அனைத்து வசதிகளும்...

கண் சம்பந்தமாக எந்த நோயாக இருந்தாலும் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்