கைதான 6 இலங்கை மீனவர்கள் தூத்துக்குடி அழைத்து வரப்பட்டனர்

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால் கைது செய்யப்பட்ட 6 இலங்கை மீனவர்கள் வியாழக்கிழமை மாலையில் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர்

Update: 2022-03-17 14:56 GMT
தூத்துக்குடி:
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால் கைது செய்யப்பட்ட 6 இலங்கை மீனவர்கள் நேற்று மாலை தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர்.
ரோந்து
தூத்துக்குடியில் உள்ள இந்திய கடலோர காவல்படையினர், ரோந்து கப்பல் மூலம் தீவிரமாக கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கடலோர காவல்படையினர் ஐ.சி.ஜி.எஸ். வஜ்ரா என்ற ரோந்து கப்பலில் சென்று கன்னியாகுமரி கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 
அப்போது கன்னியாகுமரியில் இருந்து 95 கடல் மைல் தொலைவில், இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு மீன்பிடி படகை கண்டுபிடித்து சுற்றி வளைத்தனர். 
6 பேர் கைது
அந்த படகில் இலங்கை கந்தரா பகுதியை சேர்ந்த தினேஷ் சத்துரங்க (32), சவுந்திரா ஹென்னதிகே அவிஷ்க தில்சான் (22), பசிந்து (18), பூவளு பட்டபெந்திகே ஒசான் மேலக (24), பட்டிய கும்புரகே ரவிஷ்க் அஞ்சன (19), ரோசன் (24) ஆகிய 6 பேர் இருந்தனர். அவர்களை கடலோர காவல்படையினர் கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகை தூத்துக்குடிக்கு கொண்டு வந்தனர். பின்னர் தூத்துக்குடி தருவைகுளம் பகுதியில் கடலோர பாதுகாப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர். 
இதையடுத்து 6 மீனவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுெதாடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 6 பேரையும் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
----------------

மேலும் செய்திகள்