கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் வியாழக்கிழமை தேரோட்டம்

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது

Update: 2022-03-17 13:39 GMT
கழுகுமலை:
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று(வெள்ளிக்கிழமை) தபசு காட்சி நடக்கிறது.
பங்குனி உத்திரம்
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து விழாநாட்களில் தினமும் இரவு கழுகாசலமூர்த்தி வள்ளி தெய்வானையுடன் வெவ்வேறு  வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 
விழாவின் சிகர நாளான நேற்று காலை 8.30 மணிக்கு கழுகாசலமூர்த்தி வள்ளி தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினார். 
தேரோட்டம்
அதனைத் தொடர்ந்து காலை 10.30 மணி அளவில் கோ ரதத்தில் சண்டிகேஸ்வரர், சட்டத்தேரில் விநாயகப் பெருமானும், வைரத் தேரில் கழுகாசலமூர்த்தி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது. 
சுற்றுவட்டாரத்திலுள்ள நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். வழிநெடுகிலும் பக்தர்கள் குவிந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை 6.30 மணியளவில் தேர் நிலைக்கு வந்தது. அதை தொடர்ந்து தேரில் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
தபசு காட்சி
பின்னர் இரவு 9 மணிக்கு கழுகாசலமூர்த்தி வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்தில் வீதி உலா வந்து தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று(வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு தீர்த்தவாரியும், தபசு காட்சியும் நடைபெறுகிறது. பதினோராம் திருநாளன்று கழுகாசலமூர்த்தி வள்ளி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பன்னிரண்டாம் திருநாளன்று இரவு பட்டினப்பிரவேசம் நடைபெறுகிறது. 13-ஆம் நாள் திருநாளை முன்னிட்டு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது. 
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்