காவேரிப்பாக்கம் அருகே ஆசிரியர்களை நியமிக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியல்

காவேரிப்பாக்கம் அருகே ஆசிரியர்களை நியமிக்கக்கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-17 13:24 GMT
காவேரிப்பாக்கம்

காவேரிப்பாக்கம் அருகே ஆசிரியர்களை நியமிக்கக்கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் சாலை மறியல்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த மேல்வீராணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 107 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியா் உள்பட 5 ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். இந்தநிலையில் 3 ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்று சென்றுள்ளனர்.

இதனால் போதிய ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினால், நடைபெற உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ள நிலையில் மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கவில்லை. எனவே உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தியும், தலைமை ஆசிரியரை உடனடியாக பணிமாற்றம் செய்திட வலியுறுத்தியும் நேற்று காவேரிப்பாக்கம் - பாணாவரம் சாலையில் மாணவ- மாணவிகள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சேட்டு, ராஜமுத்து மற்றும் போலீசார், மேல்வீராணம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்திபாபு, பெற்றோா் கழக தலைவர் புருஷோத்தமன் ஆகியோர் சென்று மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக சம்மந்தப்பட்ட துறையினரிடம் பேசி ஆசிரியா்களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

அதன்பேரில் மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மாணவர்களின் சாலை மறியல் போராட்டம் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக காவேரிப்பாக்கம் - பாணாவரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்