அனுமதியின்றி நடந்த சினிமா படப்பிடிப்பு

கொடைக்கானலில் அனுமதியின்றி சினிமா படப்பிடிப்பு நடந்தது. அந்த படப்பிடிப்பு குழுவினருக்கு நகராட்சி அதிகாரிகள் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Update: 2022-03-17 12:37 GMT
கொடைக்கானல்: 

‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானல் பகுதியில் அடிக்கடி சினிமா படப்பிடிப்புகள் நடப்பது வழக்கம். இந்தநிலையில் இன்று  காலை சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் இடமான கே.ஆர்.ஆர். கலையரங்கம் பகுதியில் ஒரு புதிய சினிமா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதன் காரணமாக அங்கு வாகனங்களை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது. 

அத்துடன் பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையூறு ஏற்பட்டது. இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் நகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து படப்பிடிப்பு குழுவினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

பின்னர் அனுமதி இல்லாமல் சினிமா படப்பிடிப்பு நடத்திய குழுவினருக்கு நகராட்சி அதிகாரிகள் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதையடுத்து படப்பிடிப்பு குழுவினர் அபராத தொகையை செலுத்திவிட்டு பிற்பகல் வரை அந்த இடத்திலேயே தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தினர். 

மேலும் செய்திகள்