பள்ளிக்கரணை சதுப்புநில சுற்றுச்சூழல் பூங்காவில் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு திட்டம்- அமைச்சர் ராமச்சந்திரன்

பள்ளிக்கரணை சதுப்புநில சுற்றுச்சூழல் பூங்காவில் பொதுமக்களுக்கான வசதிகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

Update: 2022-03-17 08:38 GMT
பள்ளிக்கரணை சதுப்புநிலம் ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பளவில் இருந்தது, தற்போது பல்வேறு ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு 700 ஏக்கர் பரப்பளவிலான சதுப்புநிலம் வனத்துறை பராமரிப்பில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சதுப்புநிலங்கள் அதிகம் இருந்தால் மழை காலங்களில் மழைநீர் சேகரிக்கவும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பள்ளிக்கரணை சதுப்புநில சுற்றுச்சூழல் பூங்கா முதல் கட்டமாக ரூ.61 கோடியில் மேம்படுத்தப்பட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டு இப்பகுதி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாள்தோறும் நடைபயிற்சிக்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கையும், பார்வையிட வருகை தரும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே உள்ளது.

எனவே, மத்திய அரசின் நபார்டு நிதி உதவியுடன் ரூ.281 கோடி மதிப்பில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பறவைகளுக்கான வாழ்விட ஆதாரங்களை மேம்படுத்த முழுமையான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு பெற்று பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது சென்னை மண்டல வனப் பாதுகாவலர் கீதாஞ்சலி, சென்னை மாவட்ட வன அதிகாரி பிரியதர்சஷினி மற்றும் வனச்சரகர் சரவண விவேக் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்