கொச்சி துறைமுகத்தில் குமரி மாவட்ட மீனவர்களின் ரூ.15 லட்சம் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கொச்சி துறைமுகத்தில் குமரி மாவட்ட மீனவர்களின் ரூ.15 லட்சம் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கொல்லங்கோடு:
கொச்சி துறைமுகத்தில் குமரி மாவட்ட மீனவர்களின் ரூ.15 லட்சம் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பிரபின். இவருக்கு சொந்தமான ஹெவன் என்ற விசைப்படகு மூலம் குஜராத் மாநிலத்தை சேர்ந்த கமலேஷ் என்பவர் அவரது பெயருக்கு மாற்றி மீன்பிடித்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி பிரபின் உள்பட குமரி மாவட்ட மீனவர்கள் 4 பேர் மற்றும் கேரளாவை சேர்ந்த 10 பேருடன் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
சுமார் 15 நாட்களுக்கு மேலாக மீன்பிடித்து விட்டு கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த மீன்வளத்துறை அதிகாரிகள் படகு கரை ஒதுங்குவதற்கான அனுமதி கடிதத்தை கேட்டுள்ளனர். அதனை படகில் இருந்த மீனவர்கள் காண்பித்த போது ஆன்லைன் பதிவு தவறுதலாக இருந்துள்ளது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள், படகை துறைமுகத்தில் அனுமதிக்க வேண்டுமென்றால் ஒரு ஆண்டுக்கான துறைமுக அனுமதி கடிதம் ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும் என கூறி உள்ளனர். அதற்கு மீனவர்களும் சம்மதம் தெரிவித்து பணத்தை கட்டி ரசீது பெற்றுள்ளனர்.
பின்னர் சிறிது நேரம் கழித்து மீன்வளத்துறை அதிகாரிகள், படகை சிறை பிடிப்பதாக கூறி படகில் இருந்த சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்களை பறிமுதல் செய்தனர். மேலும் அனுமதி இல்லாமல் துறைமுகத்திற்குள் நுழைந்ததால் 1 லட்சத்துக்கு மேல் அபராதம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதனை கேட்டு குமரி மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த அபராதத்தை செலுத்தக்கோரி கேரள மீன்வளத்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருவதாக குமரி மாவட்ட மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
---