நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் சுங்கம் வசூலிக்கும் உரிமம் ரூ.2¼ கோடிக்கு ஏலம்

ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் சுங்கம் வசூலிக்கும் உரிமம் ரூ.2¼ கோடிக்கு ஏலம் போனது.

Update: 2022-03-16 21:56 GMT
ஈரோடு
ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் சுங்கம் வசூலிக்கும் உரிமம் ரூ.2¼ கோடிக்கு ஏலம் போனது.
காய்கறி மார்க்கெட்
ஈரோடு ஆர்.கே.வி.ரோட்டில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அந்த மார்க்கெட் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு ஆர்.கே.வி.ரோட்டில் உள்ள காய்கறி மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதன்காரணமாக வ.உ.சி. பூங்கா மைதானத்திலேயே தொடர்ந்து மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
இந்த காய்கறி மார்க்கெட்டில் சுங்க கட்டணம் வசூலிக்கும் உரிமம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்படுகிறது. அதன்படி மார்க்கெட் ஏலம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த ஏலத்தில் 4 பேர் பங்கேற்றனர். இதில் போட்டிப்போட்டு ஏலம் கூறப்பட்டதை தொடர்ந்து முடிவில் ரூ.2 கோடியே 33 லட்சத்துக்கு மார்க்கெட் ஏலம் போனது. கடந்த முறை ரூ.1 கோடியே 98 லட்சத்து 45 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது. எனவே கடந்த முறையை காட்டிலும் சுமார் 15 சதவீதம் கூடுதலாக ஏலம் விடப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
போட்டி போட்டு ஏலம்
இதேபோல் வாரச்சந்தை, பொது கழிப்பிடம், வாகன நிறுத்துமிடங்கள், கடைகளும் ஏலம் விடப்பட்டன. இதில் நீல்கிரிஸ் ஹம்மிங் வே வாரச்சந்தை ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இந்த சந்தை வளாகம் கடந்த முறை ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்துக்கு மட்டுமே ஏலம் போயிருந்தது. ஏலத்தில் பங்கேற்றவர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கூறியதால் அதிக தொகைக்கு         ஏலம் போனது.
மாணிக்கம்பாளையம் வாரச்சந்தை ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும், பெரியசேமூர் பொதுக்கழிப்பிடம் ரூ.55 ஆயிரத்துக்கும், பாரதிநகர் பொதுக்கழிப்பிடம் ரூ.42 ஆயிரத்து 500-க்கும், ஈரோடு பஸ் நிலைய ஆட்டோ நிறுத்தம் ரூ.77 ஆயிரத்து 500-க்கும், காந்திஜிரோடு கால்டாக்சி நிறுத்தம் ரூ.81 ஆயிரத்துக்கும் ஏலம் விடப்பட்டது. எனவே மொத்தம் ரூ.2 கோடியே 42 லட்சத்துக்கு ஏலம் போனது. மேலும், 8 கடைகளில் 3 கடைகள் ஏலம் விடப்பட்டது.
பஸ் நிலையம்
ஈரோடு பஸ் நிலையத்தில் சுங்க கட்டணம் வசூல் செய்வதற்கான ஏலம் கடந்த 2 ஆண்டுகளாக விடப்படுகிறது. ஆனால் யாரும் ஏலம் கூறப்படாததால் பல முறை ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. ஏலத்துக்கான ஜி.எஸ்.டி. அதிகமாக இருந்ததால் யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. இந்தநிலையில் நேற்று ஈரோடு பஸ் நிலையத்துக்கான ஏலம் மீண்டும் விடப்பட்டது. இந்த ஏலத்தில் 3 பேர் பங்கேற்றனர். ஆனால் யாரும் ஏலம் கூறப்படாததால் ஒத்தி வைக்கப்பட்டது. ஈரோடு பஸ் நிலையத்தில் தூய்மை செய்யும் பணியுடன் சேர்ந்து சுங்கம் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்ததால், ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்