12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.
ஈரோடு
12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.
கொரோனா தடுப்பூசி
கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலில் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், அடுத்த கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கொரோனாவின் 3-வது அலையை தடுக்கும் வகையில், 12 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் முதல் கட்டமாக 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
சிறுவர்களுக்கு...
பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளிலேயே மாணவ -மாணவிகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்களை கடந்த மாணவ -மாணவிகளுக்கு 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு நேற்று தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. சிறுவர்களுக்கு கோர்பேவேக்ஸ் எனும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 12 வயது முதல் 14 வயதுடைய சிறுவர்கள் மொத்தம் 66 ஆயிரத்து 300 பேர் உள்ளனர். இதில் மாநகராட்சி பகுதியில் 14 ஆயிரத்து 600 மாணவ -மாணவிகள் உள்ளனர். இவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களிலேயே தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக ஈரோடு இடையன்காட்டுவலசு மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடத்தில் நடந்த முகாமை மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தொடங்கி வைத்தார். இதில் 12 வயது முதல் 14 வயது உடைய சிறுவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.