ஈரோட்டில் பரிதாபம் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் டிராவல்ஸ் உரிமையாளர் சாவு

ஈரோட்டில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் டிராவல்ஸ் உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-03-16 21:45 GMT
ஈரோடு
ஈரோட்டில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் டிராவல்ஸ் உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.
டிராவல்ஸ் உரிமையாளர்
ஈரோடு பழையபாளையம் கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 40). இவருடைய மனைவி கலைவாணி. சுரேஷ்குமார் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சுரேஷ்குமார் வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார்.
பின்னர் அவர் இரவில் வீடு திரும்பினார். ஈரோடு பெருந்துறை ரோடு செங்கோடம்பாளையம் பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, அதே வழியில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவருடைய மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
சாவு
இதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சுரேஷ்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சுரேஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு -பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். அவருடைய உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்