‘ஹிஜாப்'புக்கு தடை விதித்து ஐகோா்ட்டு தீர்ப்பு: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு - முஸ்லிம் அமைப்புகள் அழைப்பு

ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் இன்று (வியாழக்கிழமை) கர்நாடகத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.

Update: 2022-03-16 21:06 GMT
பெங்களூரு:

முழு அடைப்பு

  உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பில் ஆஜராக தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர்.

  இந்த மனுக்களை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, முஸ்லிம் மாணவிகள் வகுப்பில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்புக்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

  இந்த நிலையில் கர்நாடக இஸ்லாமிய மத குரு மவுலானா சாகிர் அகமதுகான் ரசதி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மிகுந்த வேதனை

  ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பில் ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அத்தியாவசியமாக பின்பற்றப்படுவது இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் நாளை (இன்று) முழு அடைப்பு நடத்த முடிவு செய்துள்ளோம். இதையொட்டி மாநிலம் முழுவதும் முஸ்லிம் அமைப்புகள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தும்.

  இந்த முழு அடைப்பு போராட்டத்தில் முஸ்லிம் பிரிவுகளை சேர்ந்த அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் இந்த போராட்டத்தை வெற்றி பெற செய்து, ஹிஜாப் அணிந்து கல்வி கற்க முடியும் என்பதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த வேண்டும். கடைகளை கட்டாயப்படுத்தி அடைக்கக்கூடாது. வன்முறையில் ஈடுபடக்கூடாது.
  இவ்வாறு அவர் கூறினார்.

  இஸ்லாமிய மத குரு மவுலானா சாகிர் அகமதுகான் ரசதி, அமீர்-இ-ஷரியத் அமைப்பின் தலைவர். அந்த அமைப்பு தான் கர்நாடகத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகளை தலைமை தாங்கி நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முழுஅடைப்பையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்