உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
சேலத்தில் நடுரோட்டில் தீக்குளித்த டிரைவர் இறந்ததை தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
சேலம்:-
சேலத்தில் நடுரோட்டில் தீக்குளித்த டிரைவர் இறந்ததை தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
தீக்குளித்து சாவு
சேலம் அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 25), சரக்கு வேன் டிரைவர். இவர் கடந்த 12-ந் தேதி கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே தனது சரக்கு வேனில் சென்று கொண்டிருந்தார். அதே நேரத்தில் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் அந்த வாகனத்தை நிறுத்தி அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது சந்தோஷ்குமார் மது போதையில் இருந்ததாக கூறி அவரது சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனால் மனவேதனை அடைந்த சந்தோஷ்குமார் அங்கு நடுரோட்டில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகி உயிருக்கு போராடிய அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.
உடலை வாங்க மறுப்பு
இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நேற்று காலை சந்தோஷ்குமாரின் தாயார் புஷ்பம் மற்றும் உறவினர்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் சந்தோஷ்குமாரின் உடலை வாங்க மறுத்ததுடன் அவருடைய சாவுக்கு நியாயம் கேட்டு கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து உறவினர்கள் கூறியதாவது:-
சந்தோஷ்குமார் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் புதிதாக சரக்கு வேன் வாங்கினார். அந்த வாகனத்தில் கடந்த 12-ந் தேதி கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே சென்ற போது, அவர் குடிபோதையில் இருந்ததாக கூறி போக்குவரத்து போலீசார், சரக்கு வேனை பறிமுதல் செய்தனர். வாகனத்தை கொடுக்கும்படி போலீசாரின் காலில் விழுந்து அவர் கதறி அழுதும் கொடுக்கவில்லை.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
போலீசாரின் அலட்சியத்தால் தான் சந்தோஷ்குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். எனவே போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு உதவித்தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். இதையடுத்து அவர்களிடம் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து சந்தோஷ்குமாரின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மாலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.