பாலமுருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
பாலமுருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது
பெரம்பலூர்
பெரம்பலூரில், எளம்பலூர் சாலையில் அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில் 42-வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா இம்மாதம் 9-ந்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக்கு அபிஷேகமும், இரவு அதிர்வேட்டுகள், மேளதாளம் முழங்க சுவாமி திருவீதி உலாவும் நடந்து வருகிறது. நேற்று காலை பாலமுருகன், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. நாரணமங்கலம் சுத்த ரத்தின சிவாச்சாரியார் தலைமையில் வேதமந்திரங்கள் முழங்க மகேந்திரன் உள்ளிட்ட சிவாச்சாரியார் குழுவினர் சிறப்பு யாகம் மற்றும் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வைத்தனர். பின்பு முருகன், வள்ளி-தெய்வானை மூர்த்திகளுக்கு மாலை மாற்றும் வைபவமும், வள்ளி-தெய்வானை உற்சவ மூர்த்திகளுக்கு மங்கல நாணை அணிவித்து மகா தீபாராதனையும் நடந்தது.
திருக்கல்யாண உற்சவத்தில் மக்கள் நற்பணி மன்ற நிர்வாகிகள், மேட்டுத்தெரு, பாரதிதாசன் நகர், எளம்பலூர் சாலை, முத்துநகர், ரோஸ் நகர், கணக்கபிள்ளை காலனி, சாமியப்பா நகர், ரெங்கா நகர், வடக்குமாதவி சாலை, மதனகோபாலபுரம், புதிய மதனகோபாலபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சுமங்கலி பெண்களுக்கு மங்கல பொருட்கள் வழங்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது. பங்குனிஉத்திர தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் 10 மணிக்குள் தொடங்கி நடக்கிறது.