செல்லாயி அம்மன் கோவில் திருவிழா

செல்லாயி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

Update: 2022-03-16 19:15 GMT
மதுரை
மதுரை ஊமச்சிகுளம் செல்லாயி அம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து  நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோவில் திருவிழா
மதுரை ஊமச்சிகுளம் வெடத்தகுளத்தில் உள்ள செல்லாயி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் புரவி எடுப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன்படி நேற்று நடைபெற்ற திருவிழாவில், குழந்தைகள், கால்நடைகள், வீடு உள்ளிட்ட உருவ பொம்மைகளை நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர். 
முன்னதாக வடக்கு மேடு என்னும் இடத்தில் செல்லாயி அம்பாள், அய்யனார், சப்த கன்னியர் உள்ளிட்ட சாமிகளின் மண் சிலைகள் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. அதனை பின்தொடர்ந்து வந்த பக்தர்கள், கோவிலில் நேர்த்திக்கடனை செலுத்தினர். பல பக்தர்கள் அக்னிச்சட்டி, கரும்புத் தொட்டில் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். 
நேர்த்திக்கடன்
முன்னதாக 15 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன், கிராம பாரம்பரிய முறைப்படி பொய்கைகரைப்பட்டிக்கு மாட்டுவண்டியில் சென்று மண் எடுத்துவரும் வைபவத்துடன் விழா தொடங்கியது. அந்த மண்ணில் செய்யப்பட்ட 1,200 சிலைகளை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தினர். விழாவையொட்டி வள்ளி திருமணம் நாடகமும் நடைபெற்றது. விழாவில் ஊமச்சிகுளம், திருமால்புரம், செட்டிகுளம், வீரபாண்டி, கூழப்பாண்டி மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்