விநாயகர் சிலையை அகற்றியதால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்-2 பெண்கள் மயங்கி விழுந்தனர்

வேலாயுதம்பாளையத்தில் விநாயகர் சிலையை அகற்றியதால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-16 18:55 GMT
வேலாயுதம்பாளையம், 
விநாயகர் சிலை
வேலாயுதம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் விநாயகர் சிலையை வைத்து பூஜை  செய்தனர். இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் விநாயகர் சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் அளித்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புகழூர் தாசில்தார் மதிவாணன் தலைமையிலான வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை வருவாய்த்துறையினர் எடுத்து சென்றனர். இதனைக்கண்டு அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் விநாயகர் சிலையை தங்களிடம் ஒப்படைக்குமாறு வேலாயுதம்பாளையம்- புன்னம்சத்திரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு முத்தமிழ் செல்வன் தலைமையில் வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டர் வினோதினி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விநாயகர் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைத்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் என்று தெரிவித்தனர்.இதனைதொடர்ந்து நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2 பெண்கள் மயக்கம்
இந்தநிலையில் வெயிலில் சாலைமறியலில் ஈடுபட்டதால் 2 பெண்கள் திடீரென மயக்கம் அடைந்தனர். இதனைதொடர்ந்து அவர்கள் 2 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இதற்கிடையே சாலை மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர் தனது வீட்டில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து வந்து தனது உடலில் ஊற்றி தற்கொலை செய்து கொள்வதாக கூறினார். இதையடுத்து, அங்கு நின்று கொண்டிருந்த போலீசார் அவரிடமிருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கிக்கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
இதையடுத்து, பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியதாக சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவை சேர்ந்த தலித் பாண்டியன், புகழூர் நகராட்சி கவுன்சிலர் சுரேஷ் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்து புகழூர் ரெயில்வே நிலையம் அருகே உள்ள அம்மா திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் இரவு 7 மணிக்கு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் புகழூர் காகித ஆலை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற ஏராளமான லாரிகள், அரசு பஸ்கள், கார்கள், வேன்கள் என இருபுறமும் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தன. இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்