தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-03-16 18:29 GMT
திருச்சி
குண்டும், குழியுமான சாலை
திருச்சி அரியமங்கலம் மந்தையிலிருந்து அடைக்கல மாதா கோவில் செல்லும் சாலை கடந்த  2 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
 சரவணன், திருச்சி.

ஆபத்தான மின்கம்பம்
திருச்சி கருமண்டபம் சக்தி நகர் 2-ம் வீதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின் கம்பம் நடப்பட்டது. அந்த மின் கம்பத்திலிருந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்சார வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது  அதன்மேல் பகுதி சிதிலமடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. சாலையில் வாகனங்கள், பொதுமக்கள் செல்லும் போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருச்சி.

குடிநீர் கிடைக்காமல் அவதி
திருச்சி நீதிமன்ற வளாகத்தில் மின்வாரிய துணை மின் நிலையம் மற்றும் உதவி செயற் பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக இந்த வளாகத்தில் உள்ள காவிரி குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பணியாளர்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுவாமிநாதன், திருச்சி.

கழிவுநீரால் துர்நாற்றம் 
திருச்சி பீமன்நகர் மார்சிங்பேட்டையில் உள்ள துர்கை அம்மன் கோவில் வலது புறம் பாதாள சாக்கடை உள்ளது. இதில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை அப்புறப்படுத்த அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருச்சி.

தெருநாய்கள் தொல்லை
திருச்சி செங்குளம் காலனி மற்றும் சமுதாய கூடம் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிகிறது. இந்தநிலையில் சாலையில் செல்லும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களை பின்னால் துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. மேலும் சாலைகளின் குறுக்கே நாய்கள் ஓடி செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பர்வீன்ராஜ், திருச்சி.

மேலும் செய்திகள்