ஓசூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்த

ஓசூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடிதம் கொடுத்தனர்.

Update: 2022-03-16 18:19 GMT
ஓசூர்:
ஓசூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடிதம் கொடுத்தனர்.
 ஒன்றியக்குழு கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த சசி வெங்கடசாமி, துணைத்தலைவராக நாராயணசாமி ஆகியோர் உள்ளனர். 16 வார்டுகளில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 9 பேரும், தி.மு.க. கவுன்சிலர்கள் 7 பேரும் உள்ளனர். இந்த நிலையில், ஒன்றியக்குழு கூட்டம் நேற்று கூட்டரங்கில் நடந்தது. 
கூட்டத்திற்கு, தலைவர் சசி வெங்கடசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நாராயணசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூபதி, பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 15  தீர்மானங்கள் நிறைவேற்ற கவுன்சிலர்களின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு இருந்தது. போதிய அவகாசம் வழங்காமல், கூட்டத்தை ஏற்பாடு செய்தாக கூறியும், தீர்மானங்களை நிறைவேற்ற மறுத்தும் தி.மு.க. உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 
நம்பிக்கை இல்லா தீர்மானம்
பின்னர் தி.மு.க. கவுன்சிலர்கள் கூறுகையில், ஒன்றியக்குழு கூட்டத்திற்கான தீர்மான நகல், எங்களுக்கு 3 நாட்களுக்கு முன்பு தான் வழங்கப்பட்டது. அதனை படித்து பார்க்கவும் போதிய அவகாசம் இல்லை. எனவே கூட்டத்தை ரத்து செய்யுங்கள் என்று கேட்டோம். ஆனால் மறுத்து, வாக்குவாதம் செய்தனர். மேலும், எங்களுக்கு பணி வழங்குவதில் பாரபட்சத்துடன் நடந்து கொள்கின்றனர். இதனால் நாங்கள் வெளிநடப்பு செய்தோம். மேலும், தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்து, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடிதம் கொடுத்துள்ளோம் என்று கூறினர்.
பின்னர், ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி, துணைத்தலைவர் நாராயணசாமி ஆகியோர் கூறுகையில், ஒன்றியக்குழு கூட்டத்திற்கான தீர்மான நகல்கள் 5 நாட்களுக்கு முன்பே கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.  அவர்கள் எங்களை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என்று துடித்து கொண்டுள்ளனர். ஆனால் அவர்களின் எண்ணம் நிறைவேறாது. எங்களுக்கு போதிய பலம் உள்ளது. அவர்கள் எங்கள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடியாது. எங்களுக்கு மெஜாரிட்டி உள்ளது. கூட்டத்தில் ஒப்புதலுக்கு வைக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றிவிட்டோம் என்று கூறினர்.

மேலும் செய்திகள்