12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
திண்டுக்கல் மாவட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட 17 லட்சத்து 97 ஆயிரத்து 277 பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. அதில் 14 லட்சத்து 96 ஆயிரத்து 926 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும், 16 ஆயிரத்து 728 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இதில் 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சி திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இதில் கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல் நாளில் 2 ஆயிரத்து 838 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 12 வயது முதல் 14 வயதுக்குள் மொத்தம் 63 ஆயிரத்து 400 பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது. மேலும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்கள் கழித்து 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குனர் வரதராஜன், மாநகர் நலஅலுவலர் இந்திரா, முதன்மை கல்வி அலுவலர் கருப்புசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் சுதாகர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.