சங்கராபுரம் அருகே கார் மோதி எலக்ட்ரீசியன் பலி
சங்கராபுரம் அருகே கார் மோதி எலக்ட்ரீசியன் உயிரிழந்தார்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகப்பிள்ளை மகன் ஸ்டாலின் (வயது 35). இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்டாலின், சொந்த ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று, ஸ்டாலின் மோட்டார் சைக்கிளில் சங்கராபுரம் சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
சோழம்பட்டு கூட்டுரோடு அருகே வந்தபோது, கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் நோக்கி சென்ற கார் ஒன்று ஸ்டாலின் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஸ்டாலின் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.