தனியார் மில்லில் பயங்கர தீ விபத்து
பொள்ளாச்சி அருகே தனியார் மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கு சிலிண்டர்கள் வெடித்ததால் பரபரப்பு நிலவியது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே தனியார் மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கு சிலிண்டர்கள் வெடித்ததால் பரபரப்பு நிலவியது.
நூல் மில்லில் தீ
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் சுங்கத்தில் தனியாருக்கு சொந்தமான நூல் மில் உள்ளது. இந்த மில்லின் ஒரு பகுதியில் திருமண மண்டபம் செயல்படுகிறது. மேலும் அருகில் பழைய பர்னிச்சர் கடையும் உள்ளது.
இந்த நிலையில் இன்று மதியம் 1.30 மணிக்கு திடீரென்று நூல் மில்லில் தீப்பிடித்தது. இதையடுத்து தொழிலாளர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மளமளவென வேகமாக பரவியது. இதுகுறித்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி
இதற்கிடையில் அருகில் உள்ள மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. மதியம் நேரம் என்பதால் விழாவிற்கு வந்தவர்கள் மண்டபத்தில் சாப்பிட்டு கொண்டு இருந்தனர். தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் திருமண மண்டபத்தில் இருந்தவர்களை தீயணைப்பு துறையினர் அங்கிருந்து வெளியே செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து மண்டபத்தில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். மேலும் மணமக்களையும் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றினர். இது மட்டுமின்றி நூல் மில்லில் பிடித்த தீ அருகில் இருந்த பர்னிச்சர் கடைக்கும் பரவியது. மேலும் நூல் மில்லில் தொழிலாளர்கள் சமையல் செய்வதற்கு 3 சிலிண்டர்கள் வைத்திருந்தனர். சிலிண்டர் மீது தீப்பிடித்ததால் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் கட்டிடம் பலத்த சேதமடைந்தது.
6 மணி நேர போராட்டம்
மதியம் 1.30 மணிக்கு தொடங்கிய தீயை அணைக்கும் பணி இரவு 8 மணி வரை சுமார் 6 மணி நேரம் நடைபெற்றது. திருமண மண்டபத்தில் இருந்தவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்தது.
இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில், தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகி இருக்கலாம். ஏற்கனவே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நூல் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகும் எந்த பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தவில்லை என்றனர்.