திருப்பூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லாததால் தொழில்துறையினர் மகிழ்ச்சி

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லாததால் தொழில்துறையினர் மகிழ்ச்சி

Update: 2022-03-16 16:04 GMT
திருப்பூர், 
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லாததால் தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதிதாக கொரோனா தொற்று இல்லை
பின்னலாடை நகரான திருப்பூரில் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. கொரோனா தொற்று மாவட்டத்தில் அதிகரித்து வந்த நிலையில் படிப்படியாக குறைந்து வந்தது. தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் பின்னர் குறைய தொடங்கியது. கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு 10-க்கு கீழ் குறைந்து விட்டது.
இந்த நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு இல்லாத நாளாக அமைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் கொரோனா இல்லாத திருப்பூர் மாவட்டம் என்ற நிலையை எட்ட முடியும்.
தொழில்துறையினர் மகிழ்ச்சி
நேற்று 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 1 லட்சத்து 29 ஆயிரத்து 915 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 841 பேர் குணமடைந்துள்ளனர். 22 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு மாவட்டத்தில் 1,052 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கொரோனாவுக்கு மேலும் யாரும் பலியாகாமல் உள்ளனர்.
தொழில் நகரான திருப்பூரில் கொரோனா புதிய பாதிப்பு இல்லாதது தொழில்துறையினரை மட்டுமில்லாமல் பொதுமக்களையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. பொது இடங்களுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக முககவசம் அணியும் பழக்கத்தை தொடர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அரசின் வழிமுறைகளை கடைபிடித்தால் கொரோனா இல்லாத மாவட்டம் என்ற நிலையை விரைவில் எட்ட முடியும்.

மேலும் செய்திகள்