முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்

பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் இன்று நடக்கிறது.

Update: 2022-03-16 16:01 GMT
பழனி: 


திருக்கல்யாணம்
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் விழாவையொட்டி தினமும் வெள்ளி காமதேனு, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. 

முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெறுகிறது. முன்னதாக காலை 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் சாமி புறப்பாடு நடக்கிறது. மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. 


அதன்படி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், கலச அபிஷேகம் நடைபெற்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மணக்கோலத்தில் வெள்ளித்தேரில் சாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

தேரோட்டம் 
திருவிழாவில் பங்குனி உத்திர நட்சத்திர தினமான நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் காலை 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் திருஆவினன்குடி கோவிலில் சாமி அருள்பாலித்தல், பகல் 12.45 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து தேரோட்டம் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

மேலும் செய்திகள்