தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

Update: 2022-03-16 15:33 GMT


உடைந்த சாக்கடை கால்வாய் 

பந்தலூர் பஜாரில் தாசில்தார் குடியிருப்பை ஒட்டி கூடலூர்-கோழிக்கோடு சாலையின் இருபுறத்திலும் கடைகள் உள்ளன. இதில் தாசில்தார் குடியிருப்பு நுழைவு வாயில் அருகே நடைபாதையுடன் கூடிய சாக்கடை கால்வாய் உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதுடன் துர்நாற்றமும் அதிகமாக வீசுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அந்த வழியாக நடந்து செல்பவர்களும் தவறி சாக்கடை கால்வாய்க்குள் விழும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் அதை சீரமைக்க வேண்டும்.

குருபரசாமி, பந்தலூர்.

கூடுதலாக தெருவிளக்குகள் வேண்டும்

  சுல்தான்பேட்டை ஒன்றியம் செலக்கரிச்சல், அப்பநாயக்கன்பட்டி, பாப்பம் பட்டி, போகம்பட்டி ஆகிய இடங்களில் போதிய அளவு தெருவிளக்குகள் இல்லை. இதன் காரணமாக இரவு நேரத்தில் இங்கு இருள் சூழ்ந்து இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் இரவில் சமூக விரோத செயல் நடக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து இங்கு கூடுதலாக தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.

  கண்ணன், பாப்பம்பட்டி.

பழுதான பாலம்

  கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல்லில் இருந்து சென்றாம்பாளையம் வரும் வழியில் ஆற்றின் குறுக்கே தரைமட்ட பாலம் உள்ளது. இந்த பாலம் பழுதடைந்த நிலையில் இருப்பதால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அங்கு விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து இந்த பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்ற வழிவகை செய்ய வேண்டும்.

  சக்திவேல், சூலக்கல்.

பஸ்கள் இயக்கப்படுமா?

  கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியில் இருந்து அவினாசி வழியாக திருப்பூருக்கு 32, 32ஏ., 32பி ஆகிய பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் தினமும் ஏராளமான பயணிகள் சென்று வருகிறார்கள். இந்த பஸ்களை கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூர் வரை நீட்டித்து இயக்கினால் இன்னும் ஏராளமான பயணிகள் பயன்பெறுவார்கள். எனவே அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  மணி, சோமனூர்.

விபத்தை ஏற்படுத்தும் சாலை

  கோவை சேரன்மாநகரில் இருந்து டைடல் பார்க் வரை செல்லும் தார் சாலை பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு குண்டும் குழியிமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து விபத்தை ஏற்படுத்தி வரும் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

  பிரவீன், கோவை.

குவிந்து கிடக்கும் குப்பைகள் 

  கோவை கீரணத்தத்தில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் சாலை ஓரத்தில் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். அந்த குப்பைகள் சுத்தம் செய்யப் படாததால் அவை குவிந்து கிடக்கிறது. அத்துடன் கடும் துர்நாற்றம் வீசுவதால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். இது குறித்து பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  உசேன், கீரணத்தம்.

போக்குவரத்து நெரிசல்

  கோவையை அடுத்த கோவைப்புதூரில் கனரக வாகனங்கள் செல்லும் பிரதான சாலையின் இருபுறத்திலும் ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளது. இதனால் இங்குள்ள கடைகளுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் சாலையில் நிறுத்திவிட்டு செல்லும் நிலையில் உள்ளதால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் விபத்துகள் ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

  சந்திரசேகரன், கோவைப்புதூர்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

  கோவை மாநகராட்சி 55 மற்றும் 56-வது வார்டுகளுக்கு உட்பட்ட நேதாஜி புரம் காந்திசிலையில் இருந்து உப்புத்தண்ணீர் டேங்க் வரை சாக்கடை கால்வாய் முறையாக சுத்தம் செய்யப்படுவது இல்லை. இதனால் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்து உள்ளது. இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் நிலவி வருவதால் அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.

  செல்வராஜ், நேதாஜிபுரம்.

குடிநீர் வினியோகிப்பது இல்லை

  துடியலூர் அண்ணாகாலனியில் ஏராளமான குடும்பங்கள் உள்ளன. இங்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் மற்றும் உப்புத்தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் குடிநீர் மற்றும் மற்ற தேவைகளுக்காக தண்ணீரை தேடி தோட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தால் முறையான பதில் இல்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரான முறையில் தண்ணீர் வினியோகிக்க வேண்டும்.

  பார்த்தசாரதி, துடியலூர்.


மேலும் செய்திகள்