சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
கோவை
கோவை மாவட்டத்தில் அலை அலையாக பரவி வந்த கொரோனா தொற்றை தடுக்க மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தடுப்பூசி செலுத்துவதுதான் சிறந்த தீர்வு என்பதால் பல்வேறு கட்டங்களாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
இதுவரை கோவை மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 99.4 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 88.1 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டு உள்ளது.
வாரந்தோறும்இதேபோல் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 66 பேருக்கு முதல் தவணை மற்றும் 1 லட்சத்து 2 ஆயிரத்து 683 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
இதேபோல் மருத்துவ பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களில் இரண்டாம் தவணை செலுத்தி 9 மாதங்கள் முடிவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதன்மூலம் இதுவரை 46 ஆயிரத்து 898 பேர் பயன் அடைந்து உள்ளனர். வாரம்தோறும் சனிக்கிழமைகளில் இதுவரை 24 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று உள்ளன. இதில் 17 லட்சத்து 84 ஆயிரம் பேர் பயன் அடைந்து உள்ளனர்.
இதற்கிடையே தற்போது 12 முதல் 14 வயதில் உள்ள சிறுவர்- சிறுமிகளுக்கு கோர்பிவேக்ஸ் தடுப்பூசி இன்று (நேற்று) முதல் செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் மூலம் கோவை மாவட்டத்தில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 200 பேர் பயன் அடைய உள்ளனர். இந்த தடுப்பூசியின் இரண்டாம் தவணை 28 நாட்கள் கழித்து செலுத்தப்பட வேண்டும்.
இதற்காக 1 லட்சத்து 4 ஆயிரத்து 100 டோஸ் தடுப்பூசிகள் தமிழக அரசால் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட செட்டி வீதி மாநகராட்சி பள்ளியில் 12 முதல் 14 வயது வரை உள்ள சிறுவர்களுக்கான தடுப்பூசி போடும் பணிகளை மாநகராட்சி மேயர் கல்பனா தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.அப்போது அவருடன் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அருணா, மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார் உள்பட பலர் இருந்தனர்.