ஆதரவற்ற, வீடற்ற குழந்தைகளின் மாதாந்திர உதவித்தொகை உயர்வு- சட்டசபையில் மந்திரி அறிவிப்பு

ஆதரவற்ற மற்றும் வீடற்ற குழந்தைகளின் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி சட்டசபையில் மந்திரி யஷோமதி தாக்கூர் அறிவித்தார்.

Update: 2022-03-16 14:25 GMT
படம்
மும்பை, 
ஆதரவற்ற மற்றும் வீடற்ற குழந்தைகளின் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி சட்டசபையில் மந்திரி யஷோமதி தாக்கூர் அறிவித்தார். 
மராட்டிய சட்டசபையில் நேற்று ஆதரவற்ற மற்றும் வீடற்ற குழந்தைகளுக்கு அரசு மேற்கொண்டு வரும் நலதிட்ட பணிகள் குறித்து மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி யஷோமதி தாக்கூர் கூறியதாவது:-
கணக்கெடுப்பு பணி
மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகியவை கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் மாநிலத்தில் ஆதவற்ற மற்றும் வீடற்ற குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. 
நடந்துகொண்டிருக்கும் கணக்கெடுப்பின்படி, தற்போது 5 ஆயிரத்து 153  குழந்தைகள் தங்கள் குடும்பத்துடன் தெருக்களில் வாழ்ந்து வருகின்றனர். 1,266 பேர் குடிசைப்பகுதிகளில் உள்ள தெருக்களில் வசிக்கின்றனர். 39 ஆதரவற்ற குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். 
தெருவோரத்தில் உள்ள குழந்தைகள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக பகல் நேரங்களில் பராமரிப்பு மையங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். 
அதுமட்டும் இன்றி ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் வீடற்ற குழந்தைகளுக்கு, குழந்தைகள் நல திட்டத்தின் மூலம் மாதந்திர உதவித்தொகை தலா ரூ.425-ல் இருந்து ரூ2 ஆயிரத்து 500 ஆக மாநில அரசு உயர்த்தியுள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார். 
அங்கன்வாடி மையங்கள்
மேலும் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “2014-ம் ஆண்டு முதல் புதிய அங்கன்வாடி மையங்களுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. இதுவரை பெறப்பட்ட அரசின் முன்மொழிவுகள் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 
முழுமையடையாமல் உள்ள அங்கன்வாடிகள் ஓராண்டிற்குள் கட்டி முடிக்கப்படும்” என்றார். 
---------------

மேலும் செய்திகள்