தண்ணீரின்றி காய்ந்து வரும் மணிலா பயிர் அரசு மானியத்தில் சொட்டுநீர் பாசன கருவிகள் கிடைக்குமா
வாணாபுரம் பகுதியில் மணிலா பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து வருவதால் அரசு மானியத்தில் சொட்டுநீர் பாசன கருவிகள் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
வாணாபுரம்
வாணாபுரம் பகுதியில் மணிலா பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து வருவதால் அரசு மானியத்தில் சொட்டுநீர் பாசன கருவிகள் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
வாணாபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான தச்சம்பட்டு, தளையாம்பள்ளம், சின்னகல்லப்பாடி, பெரிய கல்லப்பாடி, பழையனூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் மணிலா பயிரிட்டுள்ளனர். கடந்த மாதம் மழையை எதிர்நோக்கி பயிரிடப்பட்ட மணிலா பயிர் தண்ணீரின்றி காய்ந்து வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பெரும்பாலும் பருவநிலை மாறும்போது மானாவாரி பயிராக மணிலா, உளுந்து உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வருகிறோம். இப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மணிலா பயிர் தற்போது தண்ணீரின்றி காய்ந்து வருகிறது. மழை வரும் என்று எதிர்பார்த்தாலும் தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் செலவு செய்த தொகையை பெற முடியுமா? எனத் ெதரியவில்லை. வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசன கருவிகளை மானியத்தில் வழங்கினால் மணிலா பயிரை காப்பாற்றி விடலாம். வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.