ெபண்களுக்கு சிறுநீரக தொற்று பிரச்சினை எளிதில் ஏற்படுகிறது டாக்டர் தகவல்

30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு சிறுநீரக தொற்று பிரச்சினை எளிதில் ஏற்படுகிறது, என உலக சிறுநீரக தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2022-03-16 14:12 GMT
செய்யாறு
30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு சிறுநீரக தொற்று பிரச்சினை எளிதில் ஏற்படுகிறது, என உலக சிறுநீரக தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

வெம்பாக்கம் தாலுகா நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் புலிவலம் கிராமத்தில் உலக சிறுநீரக தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர் சம்பத், துரைபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு டாக்டர் யோகேஸ்வரன் தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-

சிறுநீரக நோய்

இந்த வருடத்தின் முக்கிய குறிக்கோளான அனைவருக்கும் சிறுநீரகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம். சிறுநீரகங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரகங்கள் நச்சுப் பொருட்களை வெளியேற்றுவது தொடங்கி ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்துவது வரை உடல் ஆரோக்கியத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. 
சக்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வது, நீர் வறட்சி ஆகியவற்றின் காரணமாக நாள்பட்ட சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அதிக மக்கள் சிறுநீரக செயலிழப்பால் சிரமப்படுகிறார்கள். ஆண்களைவிட பெண்களே சிறுநீரக நோயால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு சிறுநீரக தொற்று பிரச்சினை எளிதில் ஏற்படுகிறது. இதை உணவு மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் மூலம் தடுக்கலாம். 

டயாலிசிஸ் 

சிறுநீரகத்தின் சீரான செயல்பாடு உடல் ஆரோக்கியத்தின் மேம்பாடு என்பதை உணர்ந்து செயல்படுவோம். ஒருவருக்கு சிறுநீரகம் நீண்டகாலம் நன்றாக செயல்பட வேண்டும் என்றால் அவர் உணவில் உப்பைக் குறைக்க வேண்டும்.  உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது சிறுநீரக செயலிழப்பை தடுக்கும். உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது சிறுநீரகத்தின் ஆரோக்கியத்துக்கு மிக அவசியம்.

சிறுநீரகங்களின் மீது அக்கறை கொண்டவர்கள் அவ்வப்போது சர்க்கரை அளவு, உடல் எடை, ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்து கொள்வது அவசியம். சிறுநீரகம் செயலிழந்து விட்டால் செயற்கை முறையில் உடலில் இருந்து சிறுநீர் பிரித்து எடுக்கப்படுகிறது. அரசின் தேசிய டயாலிசிஸ் திட்டத்தின் மூலம் குறைந்த செலவில் டயாலிசிஸ் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் செவிலியர்கள் கலைவாணி, நிர்மலா, ஊராட்சி செயலாளர் ஆயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்