திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு துப்புரவு பணி தீவிரம்
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு துப்புரவு பணி தீவிரமாக நடந்தது. அங்குள்ள கழிவறைகள் சுத்தம் செய்யப்படுகின்றன.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு துப்புரவு பணி தீவிரமாக நடந்தது. அங்குள்ள கழிவறைகள் சுத்தம் செய்யப்படுகின்றன.
பவுர்ணமி கிரிவலம்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இங்குள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினங்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் வேதனை அடைந்த பக்தர்கள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கிரிவலம் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக இந்து முன்னணி, பா.ஜ.க. மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வந்தன. இந்த நிலையில் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்துள்ள நிலையில் இந்த மாதம் முதல், பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் கிரிவலம் செல்பவர்கள் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்புரவு பணி
இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2.10 மணி முதல் நாளை பிற்பகல் 2 மணி வரை கிரிவலம் செல்ல உகந்தநேரமாகும். கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் கிரிவலப்பாதையில் துப்புரவு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஆணாய் பிறந்தான், அத்தியந்தல், அடி அண்ணாமலை, வேங்கிக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள கழிவறைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அள்ளி வருகின்றனர். சாலைகளும் சுத்தம் செய்யப்படுகிறது. குடிநீர் வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.