திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி விளையாட்டு விழா
திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி விளையாட்டு விழா நடந்தது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியின் 11-ம் ஆண்டு விளையாட்டு விழா, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. தொடக்க நிகழ்ச்சியில், நர்சிங் கல்லூரி முதல்வர் நா.கலைகுருசெல்வி வரவேற்று பேசி, சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். பின்னர் ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாராயணராஜன் விளையாட்டு விழா கொடி ஏற்றி மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். கல்லூரி துணை முதல்வர் பெண்ணரசி சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கினார். சிறப்பு விருந்தினராக டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். பின்னர் மாணவிகள் விளையாட்டு தீபம் ஏந்தி வந்து தீபத்தை ஏற்றினார்கள். தொடர்ந்து, அனைத்து விளையாட்டு வீராங்கனைகளின் சார்பாக 4-ம் ஆண்டு மாணவி வைஷ்ணவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். மாணவிகளுக்கு 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், குண்டு எறிதல், தட்டெறிதல், அம்பு எறிதல், நீளம் தாண்டுதல் மற்றும் பந்து எறிதல் ஆகிய போட்டிகள் நடந்தது. இதில், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர். மேலும், தனிநபர் சுழற் கோப்பையை மஞ்சள் நிற அணியை சேர்ந்த 2-ம் ஆண்டு மாணவி முப்பிடாதி பெற்றார். அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று சுழற்கேடயத்தை மஞ்சள் நிற அணி பெற்றது. கல்லூரி இணை பேராசிரியர் ஹேமா நன்றி கூறினார். விழாவில் அனைத்து பேராசியைகள், உதவி பேராசிரியைகள், ஆசிரியைகள், கல்லூரி ஊழியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.