செம்மஞ்சேரியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை - நண்பர்கள் 2 பேர் போலீசில் சரண்

செம்மஞ்சேரியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நண்பர்கள் 2 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.

Update: 2022-03-16 00:53 GMT
சோழிங்கநல்லூர்,

செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 2 பேர் சரண் அடைந்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த சதீஷ் (வயது 40), சென்னை கண்ணகிநகரை சேர்ந்த விஜய் என்ற மணி (39) என்பது தெரியவந்தது.

மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களுடைய நண்பரான சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அருண் (29) என்பவருடன் பழைய மாமல்லபுரம் சாலையை ஒட்டியுள்ள முள்புதர் ஒன்றில் கடந்த 11-ந் தேதி மது குடித்துள்ளனர்.

அப்போது தங்களது செல்போனை அருண் திருடி விட்டதாக கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறில் அருகில் கிடந்த கல்லை எடுத்து அருணின் தலையில் போட்டுவிட்டு அவர்கள் சென்று விட்டனர். மறுநாள் சென்று பார்த்தபோது அருண் இறந்து கிடந்துள்ளார்.

எப்படியும் தன்னை போலீசார் பிடித்து விடுவார்கள் என்று பயந்து போன அவர்கள் இருவரும் வக்கீல் ஒருவரின் உதவியுடன் போலீசில் சரண் அடைந்துள்ளனர் என்பது தெரியவந்தது.

கொலை நடந்த இடம் புதர் நிறைந்த பகுதி என்பதால் யாருக்கும் இது குறித்து தெரியவில்லை. அருண் சென்னை திருவேற்காட்டில் உள்ள மதுகடை பார் ஒன்றில் வேலை செய்து வந்தார்.

இதையடுத்து போலீசார் கொலை நடந்த பகுதிக்கு சென்று பார்த்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த அருணின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் சதீஷ், மணி இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்