சிறுவன் கொலை வழக்கில் வாலிபர் கைது

செங்குன்றத்தில் சிறுவன் கொலை வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-16 00:28 GMT
செங்குன்றம்,  

செங்குன்றம் சி.கே.மாணிக்கனார் 2-வது தெருவை சேர்ந்தவர் கோபி. இவரது மகன் நாகராஜ் (வயது 15). கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் புழல் ஏரிக்கரை அருகே கத்திக்குத்து காயங்களுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தகவலறிந்த செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், அவரது நண்பர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டோரிடம் சந்தேகத்தின் பேரில், விசாரணை நடத்தினர். இதில் செங்குன்றம் பொதுப்பணித்துறை அலுவலகம் தெருவை சேர்ந்த அர்ஜூனன் (19) என்பவர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. 

அவரிடம் நடத்திய விசாரணையில், புழல் ஏரி கரையோரம் சென்று கஞ்சா புகைத்தபோது, அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பீர் பாட்டிலால் நாகராஜை குத்திக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில் அர்ஜூனனை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்