மதுகுடிக்க பணம் கேட்டதால் தகராறு: மகன் தள்ளியதில் தவறி விழுந்த முதியவர் சாவு
கொரட்டூர் அருகே மதுகுடிக்க பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் மகன் தள்ளியதில் தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திரு.வி.க.நகர்,
சென்னை கொரட்டூர் அடுத்த பாடி அவ்வை நகர், பெரியார் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 80). இவரது மனைவி ராணி (64). இவர்களது மகன் சங்கர் (34). சங்கருக்கு திருமணமாகி மனைவி பிரிந்து சென்று விட்ட நிலையில், பெற்றோருடன் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக உடல்நலமின்றி சுந்தரமூர்த்தி வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 12-ந் தேதி சங்கர் தனது தாய் ராணியிடம் மதுகுடிக்க பணம் தரும்படி கேட்டு தகராறு செய்து அடித்துள்ளார். அப்போது இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சுந்தரமூர்த்தி கட்டிலில் எழுந்து வந்து சங்கரை தடுக்க முயன்றார். இந்தநிலையில், திடீரென சங்கர் சுந்தரமூர்த்தியை வேகமாக தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.
இதில் கீழே தவறி விழுந்து மயங்கிய சுந்தரமூர்த்தியை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதைத்தொடர்ந்து ராணி கொடுத்த புகாரின்பேரில், கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த சுந்தரமூர்த்தி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுந்தரமூர்த்தி உயிரிழந்ததை தொடர்ந்து போலீசார் வழக்கை கொலை வழக்காக மாற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.