2 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு மாவட்டத்தில் கொரோனா புதிய பாதிப்பு இல்லை
2 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு மாவட்டத்தில் கொரோனா புதிய பாதிப்பு இல்லை.
ஈரோடு
2 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு மாவட்டத்தில் கொரோனா புதிய பாதிப்பு இல்லை.
கொரோனா
சீனா நாட்டில் இருந்து உருவான கொரோனா தொற்று தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு பரவ தொடங்கியது. சுனாமியாக வந்த தொற்று பாதிப்பு மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டது. எதிர்பாராத உயிர் இழப்பு, பொருளாதார பாதிப்பை கொரோனா ஏற்படுத்தியது. முதல் அலையின்போது பொதுமக்களிடம் அச்சம் அதிகமாக காணப்பட்டது.
அதன்பிறகு 2-வது அலை பெரும் உயிரிழப்பை சந்திக்க நேர்ந்தது. ஆக்சிஜன் தட்டுப்பாடு, ஆஸ்பத்திரிகளில் படுக்கை கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் தவிப்பு, ஆம்புலன்ஸ்களிலேயே ஆஸ்பத்திரிகளின் வாசலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்திலும் தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்தது. மற்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைய தொடங்கியபோதும், ஈரோட்டில் குறையாமல் இருந்து வந்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
பாதிப்பு இல்லை
கொரோனா 3-வது அலையும் ஈரோடு மாவட்டத்தில் வேகமாக பரவியது. ஆனால், கொரோனா தடுப்பூசி அதிகமானோருக்கு செலுத்தப்பட்டு இருந்ததால், 2-வது அலையை போன்ற பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் தொற்று பரவல் வேகமாக குறைந்தது. கடந்த 2 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை புதிய பாதிப்புகள் தினமும் இருந்து கொண்டே இருந்தது. கடந்த 2 வாரங்களாக புதிய பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் காணப்பட்டது.
இந்தநிலையில் நேற்று புதிய தொற்று பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை. இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 660 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 906 பேர் மீண்டு உள்ளனர். நேற்று மட்டும் 5 பேர் குணமடைந்தனர். தற்போது 20 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 734 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.