மதுரை கலெக்டர் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
அவமதிப்பு வழக்கில் மதுரை கலெக்டர் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை
மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த முத்துகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- மதுரை மாவட்டம் காளிகாப்பன் பகுதியில் பாட்டை மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலை என வருவாய் ஆவணங்களில் உள்ள நிலத்தை ஆக்கிரமித்து சிலர் குடியிருக்கின்றனர். இந்த நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை (பாதை) என வகைப்படுத்தப்பட்ட நிலத்தை பிறருக்கு வழங்க முடியாது. எனவே அங்கு குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க தடை விதிக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு வேறு பகுதியில் நிலம் வழங்கி, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தேன். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, இந்த விவகாரத்தில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே இந்த நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி பட்டா வழங்கி வரன்முறை செய்ய ஏதுவாக சாலை என்பதை நிலம் என வகை மாற்றம் செய்து கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இது ஐகோர்ட்டு உத்தரவை மீறும் செயலாகும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.முரளிசங்கர் ஆகியோர் விசாரித்தனர். முடிவில், இதுகுறித்து ஏப்ரல் மாதம் 8-ந் தேதி மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் ஆஜராகி பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.