பாலருவி எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரத்தை மாற்ற அதிகாரிகள் மறுப்பு

நெல்லை-பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரத்தை மாற்ற அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து உள்ளதால் பயணிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர்.

Update: 2022-03-15 20:48 GMT
தென்காசி:
நெல்லை-பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரத்தை மாற்ற அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து உள்ளதால் பயணிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர்.

பாலருவி எக்ஸ்பிரஸ்
118 ஆண்டுகள் பழமைவாய்ந்த நெல்லை - கொல்லம் ரெயில் வழித்தடத்தில் தமிழகத்தில் நெல்லை டவுன், பேட்டை, சேரன்மாதேவி, காருக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பை, கீழஆம்பூர், ஆழ்வார்க்குறிச்சி, ரவணசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி, செங்கோட்டை, பகவதிபுரம் ஆகிய ரெயில் நிலையங்கள் உள்ளன.
நெல்லையில் இருந்து இந்த வழித்தடத்தில் கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு பாலருவி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16791/16792) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நெல்லையில் இருந்து செல்லும்போது பாவூர்சத்திரத்திலும், பாலக்காட்டில் இருந்து வரும்போது கீழக்கடையத்திலும் நிற்பது இல்லை. இருமார்க்கத்திலும் செங்கோட்டை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு உள்ளது.

தமிழக பயணிகள் பாதிப்பு
முன்பு இந்த ரெயில் கடையம், பாவூர்சத்திரம், செங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் நின்று சென்றது. மேலும் ரெயில் புறப்படும் நேரமும் தற்போதைய நேரத்தை ஒப்பிடும்போது முன்பாக இருந்தது. இதனால் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும், வியாபாரிகளும் கேரளாவில் உள்ள புனலூர், கொட்டாரக்கரை, கொல்லம், கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் செல்ல இந்த ரெயில் சேவையை பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது கடையம் உள்ளிட்ட இடங்களில் நிற்காமல் செல்வதாலும், நள்ளிரவில் புறப்பட்டு செல்வதாலும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள பராமரிப்பு பிட்லைனில் சுத்தம் செய்யப்படுகிறது. நெல்லை சந்திப்பில் இருந்து இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு, கேரள எல்லைக்குள் அதிகாலை 4 மணி அளவில் செல்லும் வகையில் முழுக்க முழுக்க கேரள பயணிகள் பயன்பெறும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரெயில்வே நிராகரிப்பு
இதையடுத்து பாலருவி எக்ஸ்பிரஸ் செங்கோட்டை, பாவூர்சத்திரம், கடையம் ஆகிய இடங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில்வே துறையை அரசியல் கட்சியினர், ரெயில் பயணிகள் சங்கத்தினர், பொதுமக்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மதுரை ரெயில்வே கோட்ட ஆலோசனை கூட்டத்திலும் எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதனை தெற்கு ரெயில்வே நிராகரித்து பதில் அனுப்பி உள்ளது.
நெல்லையில் இருந்து புனலூர் வரை நடுவில் உள்ள ரெயில் நிலையங்களை நள்ளிரவில் கடப்பதால் தான் நிறுத்தங்கள் கொடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் காரணம் கூறி உள்ளனர். இது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பாவூர்சத்திரம் பாண்டியராஜா மற்றும் பயணிகள் கூறியதாவது:-

பராமரிப்பு பணி
பாலருவி எக்ஸ்பிரஸ் பராமரிப்பு பணிகளுக்காகவே நெல்லை சந்திப்பு பணிமனைக்கு தள்ளிவிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே புனலூர்-பாலக்காடு இடையே மட்டும் இயங்கி வந்த ரெயில்தான் நெல்லை வரை நீட்டிக்கப்பட்டது. அந்த ரெயிலை கழுவும் இடமாக மட்டுமே நெல்லை பயன்படுத்தப்படுகிறது.
இதுதொடர்பாக எம்.பி.க்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அதற்கு தெற்கு ரெயில்வே அதிகாரிகள், இந்த ரெயில் கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் பயணிகளுக்காக இயக்கப்படுவதால் இந்த ரெயிலின் நேரத்தை மாற்ற முடியாது என்று தெரிவித்து உள்ளனர். நேரத்தை மாற்ற முடியாது என்றாலும் பரவாயில்லை. கடையம், பாவூர்சத்திரம், செங்கோட்டையில் நிறுத்தங்கள் கொடுங்கள் என்றால் ரெயில் இரவு 12 மணி அளவில் கிடைக்கிறது. அதனால் பயணிகள் ஏற மாட்டார்கள் என்று காரணம் சொல்லி நிறுத்தமும் கிடையாது என கூறிஉள்ளனர்.

போராட்டம் 
எனவே இரவு 9 மணி முதல் 10 மணிக்குள் நெல்லையில் இருந்து புறப்படும் வகையில் நேர அட்டவணை மாற்றப்பட்டு, கடையம், பாவூர்சத்திரம், செங்கோட்டை நிறுத்தங்கள் வழங்கப்பட்டு பாலருவி ரெயிலை இயக்க வேண்டும்.
இதுதொடர்பாக அனைத்துக்கட்சி தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பயணிகளை ஒருங்கிணைத்து வருகிறோம். தென்காசியில் அனைவரையும் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்