‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலை சீரமைக்கப்படுமா?
சேலம் மாவட்டம் அக்கரபாளையத்தை அடுத்த பாலம்பட்டி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள சாலை ஒரு ஆண்டுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதுபற்றி பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பிக்க வேண்டும்.
ஊர்மக்கள், பாலம்பட்டி, சேலம்.
ஆபத்தான குடிநீர் தொட்டி
நாமக்கல் மாவட்டம் எலச்சிப்பாளையம் ஒன்றியம் மானத்தி கிராமம் செம்மாங்காட்டு புதூரில் அருந்ததியர் தெருவில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஊருக்கு நடுவே உள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து இடியும் நிலையில் உள்ளது. இந்த மேல்நிலை தொட்டி எப்போது இடிந்து விழும் என்ற அச்சத்துடேன அந்த பகுதி மக்கள் இருக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் உள்ள தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி குடிதண்ணீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், புதூர், நாமக்கல்.
பெயர் பலகை வேண்டும்
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 32-வது வார்டு நேதாஜி ரோட்டில் சிங்கார முதலியார் தெரு உள்ளது. நேதாஜி சாலை, பழைய பெங்களூரு ரோடு என அழைக்கப்படும் இந்த தெருவில் பெயர் பலகை வைக்கப்படவில்லை. இதனால் தபால்காரர் மூலம் தபால் சரியாக வருவதில்லை. புதியதாக வரும் பொதுமக்களுக்கும் சரியான முகவரி தெரிவதில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அந்த தெருவிற்கு பெயர் பலகை வைக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மு.தேவகுமார், ஓசூர்.
குண்டும், குழியுமான சாலை
நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த வகுரம்பட்டி பிரிவு சாலையில் இருந்து சிங்கிலிபட்டிக்கு செல்லும் சாலையானது குண்டும், குழியுமாக மோசமாக காட்சி அளிக்கிறது. 10 ஆண்டுகளுக்கு மேலாக இதே நிலையில் தான் உள்ளது. இந்த சாலை பள்ளி வாகனம், கனரக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கிய சாலை ஆகும். மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும். இதுபற்றி பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை புதுப்பிக்க முன் வருவார்களா?
சா.விஜயன், சிங்கிலிப்பட்டி, நாமக்கல்.