பெலகாவியில் 3 பெண்டாட்டிக்காரர் படுகொலை

பெலகாவியில் 3 பெண்டாட்டிக்காரர் ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நடந்து உள்ளது.

Update: 2022-03-15 20:30 GMT
பெலகாவி:

3 திருமணம்

  பெலகாவி புறநகர் பவானிநகரில் வசித்து வந்தவர் ராஜூ மல்லப்பா(வயது 45). ரியல் எஸ்டேட் அதிபர். இவருக்கும் உமா என்ற பெண்ணுக்கும் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மராட்டிய மாநிலம் லாத்தூரை சேர்ந்த கிரணாலா என்பவரை, ராஜூ 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

  அந்த பெண்ணுக்கும் 2 குழந்தைகள் உள்ளது. இதற்கிடையே கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தீபா என்ற பெண்ணை ராஜூ 3-வதாக திருமணம் செய்தார். தீபா தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார். 3 மனைவிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ராஜூ செய்து கொடுத்து இருந்தார்.

ஆயுதங்களால் தாக்கி கொலை

  முதல் மனைவி உமா தனது 2 பிள்ளைகளுடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். மற்ற 2 மனைவிகளுடன் ராஜூ பெலகாவியில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை தனது காரில் ராஜூ வெளியே சென்று கொண்டு இருந்தார். அப்போது காரை வழிமறித்த மர்மநபர்கள் ராஜூவிடம் தகராறு செய்தனர். பின்னர் அவரை காரில் இருந்து வெளியே தள்ளி தாக்கினர்.

  இதனால் ராஜூ அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் ராஜூவை விரட்டி சென்ற மர்மநபர்கள் அவரது கண்ணில் மிளகாய் பொடியை தூவினர். இதனால் ராஜூ அலறினார். இந்த சந்தர்ப்பத்தில் மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ராஜூவை தாக்கினர். இதில் பலத்த வெட்டு காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

முன்விரோதம் காரணமா?

  இந்த கொலை சம்பவம் பற்றி அறிந்ததும் பெலகாவி புறநகர் போலீசார் அங்கு சென்று ராஜூவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜூவை கொலை செய்தது யார்? என்ன காரணத்திற்காக கொலை நடந்தது? என்பது தெரியவில்லை.

  முன்விரோதம் அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த கொலை சம்பவம் குறித்து பெலகாவி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்