அம்மா உணவகத்தில் உணவு தயாரிக்காததால் சாப்பிட வந்தவர்கள் ஏமாற்றம்
அம்மா உணவகத்தில் உணவு தயாரிக்கப்படாததால் சாப்பிட வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தாமரைக்குளம்:
அரியலூர் பஸ் நிலையம் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலையில் இட்லி ஒரு ரூபாய்க்கும், மதியம் சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. தினமும் இந்த உணவகங்களில் சுமார் 1,200 இட்லி விற்பனையாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை கியாஸ் சிலிண்டர் இல்லாத காரணத்தால் அம்மா உணவகங்களில் உணவு தயார் செய்யப்படவில்லை. இதனால் அங்கு சாப்பிட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதையறிந்த அ.தி.மு.க.வினர் பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகம் முன்பு திரண்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நகராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து கியாஸ் சிலிண்டருக்கு ஏற்பாடு செய்தனர். இதையடுத்து அம்மா உணவகத்தில் மதிய உணவு தயார் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அம்மா உணவகத்தில் சாப்பிடுபவர்களில் பெரும்பாலானோர் கூலி வேலை செய்பவர்கள் என்பதால், அங்கு தடையின்றி உணவு வழங்க வேண்டும், என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.