கடைகள் மீது தனியார் பஸ் மோதல்
திருவெண்ணெய்நல்லூரில் கடைகள் மீது தனியார் பஸ் மோதியது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.
திருவெண்ணெய்நல்லூர்,
திருக்கோவிலூரில் இருந்து விழுப்புரம் நோக்கி நேற்று தனியார் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் திருவெண்ணெய்நல்லூர் பயணிகள் நிழற்குடை அருகே வந்தபோது திடீரென பஸ்சின் பிரேக் பழுதானது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்த மருந்தகம் உள்ளிட்ட கடைகளின் முன்பக்கத்தில் மோதி நின்றது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இந்த விபத்தில் சாலையில் நடந்து சென்ற சிறுவானூர் கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வன் (வயது 17) என்கிற பிளஸ்-2 மாணவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் விபத்தில் மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.