கன்னியாகுமரியில் ரெயில் பராமரிப்பு பணிமனை அமைக்கும் திட்டம் ரத்து

கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனை அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-03-15 18:14 GMT
நாகர்கோவில், 
கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனை அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி ரெயில் நிலையம்
கன்னியாகுமரியில் இருந்து சென்னை, புனே, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு தினசரி ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் புதுச்சேரி, ஹவுரா, திப்ருகர் ஆகிய இடங்களுக்கு வாராந்திர ரெயில்களும், புதுடெல்லிக்கு வாரத்துக்கு 2 நாட்களும், ராமேசுவரத்திற்கு வாரத்துக்கு 3 நாட்களும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு பல இடங்களுக்கு ரெயில் இயக்கப்பட்டு வரும் நிலையிலும் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் பராமரிப்பு வசதிகள் இல்லை.
இதன் காரணமாக நீண்ட தூரம் இயக்கப்படும் ரெயில்களின் காலி பெட்டிகள் பராமரிப்பு பணிக்காக 17 கிலோ மீட்டர் தூரம் உள்ள நாகர்கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் கன்னியாகுமரி- புனே ஜெயந்தி ஜனதா ரெயில் காலிப்பெட்டிகளும் தினமும் நாகர்கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, ராமேசுவரம் ஆகிய ரெயில்களுக்கு எந்த வித பராமரிப்பும் கன்னியாகுமரியில் செய்வது இல்லை. அதுவும் நாகர்கோவிலிலேயே செய்யப்பட்டு வருகிறது. 
பராமரிப்பு பணிகள்
நாகர்கோவிலில் பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மீண்டும் நாகர்கோவிலில் இருந்து காலி பெட்டிகளாகவே கன்னியாகுமரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு காலி பெட்டிகள் கொண்டு செல்வதை தவிர்ப்பதற்காக கன்னியாகுமரி- திருவனந்தபுரம் இருவழிபாதை திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் ஒரு பராமரிப்பு பணிமனை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கும் நிலையில் இருந்தது.
ஆனால் இந்திய அளவில் ரெயில்வே வாரியத்தின் மேம்படுத்தப்பட்ட புதிய விதியின்படி கன்னியாகுமரியில் பராமரிப்பு பணிமனை அமைக்கும் திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் அங்கு லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. பணிமனையில் பராமரிப்புக்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும் என்பதால் பராமரிப்பு பணிமனை வசதிகள் அமைக்கும் திட்டத்தை ரெயில்வே துறை கைவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தனி தண்டவாளம்
இதனால் தொடர்ந்து நேர விரயம் ஏற்படும். அதே சமயத்தில் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு காலி பெட்டிகளை கொண்டு வருவதற்கு என தனியாக ஒரு தண்டவாளம் அதாவது மூன்றாவது தண்டவாளம் அமைக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.

மேலும் செய்திகள்