இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கர்நாடக அரசை கண்டித்து திருத்துறைப்பூண்டியில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி;
கர்நாடக அரசை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேகதாதுவில் அணை
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் காவிரி ஆற்று நீரை நம்பி உள்ளது. இந்த நிலையில் உரிய நேரத்தில் கர்நாடகாவில் தண்ணீர் திறக்காததாலும் பருவமழை சரியாக பெய்யாததாலும் அடிக்கடி விவசாயம் பாதிக்கப்படுகிறது.
ஒரு சில நேரங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையும் உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் கர்நாடக சட்டமன்றத்தில் மேகதாதுவில் அணை கட்ட ரூ.100 கோடி ஒதுக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். டெல்டா மாவட்ட பகுதியில் விவசாயம் அழியும் சூழல் ஏற்பட்டுவிடும் என கூறி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
இந்தநிலையில் திருத்துறைப்பூண்டியில் கர்நாடக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ.. உலகநாதன் தலைமை தாங்கினார். திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திர ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாலு, நகர செயலாளர் முருகேசன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ஜெயபால், நகர செயலாளர் சுந்தர், நகர தலைவர் பக்கிரிசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு 100 கோடி ஒதுக்கீடு செய்ததை கண்டித்தும், தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ள உரிய தண்ணீரை உடனே வழங்க கேட்டும் கோஷம் எழுப்பினர்.