கும்பகோணத்தில் வெல்டிங் பட்டறையில் இரும்பு பொருட்களை திருடிய 2 பேர் கைது
கும்பகோணத்தில் வெல்டிங் பட்டறையில் இரும்பு பொருட்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம்:-
கும்பகோணத்தில் வெல்டிங் பட்டறையில் இரும்பு பொருட்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வெல்டிங் பட்டறை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சக்கரபாணி கோவில் சன்னதி தெருவை சேர்ந்தவர் வளையாபதி (வயது65). இவர் கும்பேஸ்வரன் திருமஞ்சன வீதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய பட்டறைக்கு வெளியே வேலைக்கு தேவையான இரும்பு பைப் உள்பட பல்வேறு இரும்பு மற்றும் சில்வர் பொருட்களை அடுக்கி வைத்திருப்பது வழக்கம்.
சம்பவத்தன்று இரவு வளையாபதி வழக்கம்போல் வெல்டிங் பட்டறையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் அன்று இரவு சரக்கு வாகனத்தில் வந்த வாலிபர்கள் 2 பேர் அங்கு இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சில்வர் மற்றும் இரும்பு பைப் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றனர்.
2 பேர் கைது
மறுநாள் வளையாபதி பட்டறைக்கு வந்து பார்த்தபோது அவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்திவாசன், ராஜா மற்றும் தனிப்படை போலீசார் இரும்பு பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில் கும்பகோணம் அருகே உள்ள மூப்பக்கோவில் ஏரகரம் வழிநடப்பு பகுதியை சேர்ந்த மார்ட்டின் மகன் அமர்நாத் (25), முருகன் மகன் நிசாந்த் (22) ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு பொருட்களை கைப்பற்றினர்.