ஜீப் டிரைவர் மீது மேலும் ஒரு வழக்கு
பாலியல் தொல்லை வழக்கில் கைதான ஜீப் டிரைவர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி:
பெரியகுளம் அருகே உள்ள அகமலை மலைக்கிராமத்தை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (வயது 21). ஜீப் டிரைவர். சில நாட்களுக்கு முன்பு இவர், தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த 32 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் தென்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், இவர் மீது தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் மற்றொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பெரியகுளம் அருகே உள்ள ஒரு மலைக்கிராமத்தை சேர்ந்த பெண்ணை, அவருடைய கணவர் மலையில் உள்ள அருவி அருகில் அடிபட்டுக் கிடப்பதாக கூறி நவநீதகிருஷ்ணன் அழைத்தார். அதை நம்பிய அந்த பெண், நவநீதகிருஷ்ணனுடன் அருவி இருக்கும் இடத்துக்கு சென்றார். அந்த பெண்ணின் தாயாரும் தனது பேத்தியான கைக்குழந்தையுடன் பின்தொடர்ந்து சென்றார்.
மலைப்பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பின்னர் அந்த பெண் தனது தாய் மற்றும் கைக்குழந்தையுடன் அங்கிருந்து தப்பி வந்து விட்டார். இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், தேனி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.