சரக்கு ஆட்டோ மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் சாவு
திருப்பனந்தாள் அருகே சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
திருப்பனந்தாள்:-
திருப்பனந்தாள் அருகே சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கல்லூரி மாணவர்
தஞ்சை மாவட்டம் சோழபுரம் அருகே உள்ள அணைக்குடி அழகிரி நாதன் பேட்டையை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் அய்யப்பன் (வயது 22). கும்பகோணம் அரசு ஆண்கள் கலை கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்த இவர், கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார்.
கும்பகோணம் உத்தமதானி ஊருடையாநத்தம் தெற்கு வீதியை சேர்ந்த ஞானசேகரன் மகன் கவுதமன்(22). இவர், கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர்கள் இருவரும் நண்பர்கள்.
சரக்கு ஆட்டோ மோதியது
நேற்று முன்தினம் அய்யப்பன், கவுதமன் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் திருப்பனந்தாளில் இருந்து அணைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். சோழபுரம் அருகே கோவிலாச்சேரி மெயின் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த சரக்கு ஆட்டோ நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அய்யப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கவுதமனை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே கவுதமனும் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த சோழபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சோழபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் நண்பர்கள் இருவர் பலியான சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.